பழனி(திண்டுக்கல்): தமிழ்நாட்டில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
கரோனா பரவல் காரணமாக 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் எந்த ஒரு நிகழ்வுக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று தைப்பூச விழா என்பதால் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றாலும்; லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலப்பாதையில் தங்கி நாளை சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதென முடிவில் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பக்தர்கள் கூறுகையில், 'தைப்பூசமன்று முருகனைக் காணமுடியாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து தைப்பூசமன்று முருகனைக் காண இங்கு வந்துள்ளோம்.
இதை முதலமைச்சர் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியிருக்க வேண்டும். திருப்பதி போன்று இங்கு முன்பதிவுடன் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி!