திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்திவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பழனி கோயிலுக்கு உட்பட்டு சரவணப்பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம், தண்டாயுதபாணி நிலைய முடி இறக்கும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்கள் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அப்போது முதல் முடி காணிக்கை சீட்டுக்கு கட்டணம் செலுத்தாமல் பக்தர்கள் முடி காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.
தற்போது முடி காணிக்கை சீட்டு வழங்கும் பணியை மெருகூட்டுவதற்காக புதிய நடைமுறையை கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பக்தர்களின் போட்டோவுடன் இணைத்து ஆன்லைன் மூலமாக முடி காணிக்கை சீட்டு வழங்கபட்டு, பின்னர் முடி காணிக்கை செலுத்தப்பட்டு மீண்டும் இந்த சீட்டை கோயில் நிர்வாக டிக்கெட் வழங்கும் இடத்தில் கொடுத்து முடி எடுத்தவரின் போட்டோவுடன் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு நீண்ட நேரம் தாமதமாவதால் தங்களுக்கு வேலை செய்ய நேரம் போதவில்லை என்றும், பழைய முறை சீட்டு வழங்க வேண்டும் என ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புதிய வகை சீட்டு மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், இன்று இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளரான பாலன் என்பவர் முடி காணிக்கை செலுத்துவதற்காக சரவணப் பொய்கை முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு வந்து முடி காணிக்கை சீட்டு வாங்கி முடி காணிக்கை எடுத்துள்ளார். பின்னர், முடி காணிக்கை செலுத்திவிட்டு மீண்டும் அந்த சீட்டில் முடி காணிக்கை எடுத்தவரின் புகைப்படத்துடன் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில் முடி எடுத்தவர் படத்திற்கு பதிலாக வேறொருவரின் படம் இருந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து கோயில் சூப்பிரண்டிடம் கேட்டபோது, இங்கு இப்படி தான் என்றும் பேசியதாக தெரிகிறது. மேலும் பெண்களுக்கு முடி காணிக்கை எடுத்தால் பழனி கோயிலில் மூன்று பேர் இலவசமாக தரிசனம் செய்து கொள்ளலாம். ஆனால், சூப்பிரண்டுகள் உதவியுடன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு தனியார் முடி எடுக்கும் இடங்களில் பெண்கள் மொட்டைக்கு இலவசம் என்று போலி கைடுகள் அழைப்பதை நம்பி செல்லும் பெண் பக்தர்கள் மொட்டை அடிப்பதால் பெண்கள் முடி ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் என்றும், இதில் கோயில் அதிகாரிகளுக்கு பங்கு செல்கிறது என்றும், இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடப்பதாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:"துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" - சிவாஜியின் பாடலை பாடி அசத்தும் 2ஆம் வகுப்பு மாணவன்!