திண்டுக்கல்: வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் மாணவி ஒருவர் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக, கணித ஆசிரியை அனிதா, “மதிப்பெண் குறைவாக எடுத்ததற்கு தூக்கு போட்டு செத்துப் போ.. உன் பிணத்தை உன் பெற்றோரிடம் கொடுத்து விடுகிறேன்..’ என்று திட்டியுள்ளார்.
இதனால் அம்மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர், உடனடியாக பள்ளித்தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியை அனிதா, “செத்துப் போ என்று கூறியிருப்பேன். இந்த மார்க் எடுப்பதற்கு செத்துப்போ என்று கூறியிருப்பேன். அதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்கக் கூடாது. நான் பயங்கரமாக அடிப்பேன். அதேபோல் அரவணைப்பேண்” என கூறினார்.
மேலும் இதுதொடர்பாக பெற்றோர் கூறுகையில், “குழந்தைகளை கஷ்டப்பட்டுதான் பள்ளிக்கு அனுப்புகிறோம். இங்கு ஆசிரியர்கள் நடத்தும் விதத்தால் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், பெற்றோர் மற்றும் பொதுமக்களை திரட்டி பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மின்னணுவியல் பயிற்சி முகாம்