சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விலங்கியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் தூய்மை, பசுமை, ஆரோக்கியமான இந்தியாவை வலியுறுத்தி கின்னஸ் சாதனைக்காக இந்தியா முழுவதும் இருசக்கரவாகனத்தில் (ஸ்கூட்டர்) சுற்றி வருகிறார். கடந்த 2017இல் கின்னஸ் சாதனை முயற்சிக்காக விண்ணப்பித்த இவருக்கு 2018ஆம் ஆண்டு அனுமதி கிடைத்தது. இதனையடுத்து 2019 மே மாதத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா குறித்து ஒரு மாதம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் கேரளா, கர்நாடகா செல்லவுள்ளார். இறுதியாக தனது பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் வந்த செல்வகுமாரை, அங்குள்ள பலரும் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து விவரித்த செல்வக்குமார், டெல்லி, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், கொல்கத்தா உள்ளிட்ட 25 மாநிலங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் இதுவரை 68 ஆயிரத்து 610 கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளதாகவும் தனது பயணத்தில் 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரம் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 5 லட்சம் கிராமங்கள், 11 எல்லைகளை கடந்து வந்துள்ளாதகவும் தன்னுடைய இந்த பயணம் கின்னஸில் பதிவு செய்யப்படுவதற்காக தனது ஸ்கூட்டரில் ஜிபிஎஸ், கேமரா உள்ளிட்ட கருவிகள் பொருத்தி அதில் பதிவாகும் தகவல்களை கின்னஸ் அலுவலர்களிடம் ஒப்படைக்கபோவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
கின்னஸ் சாதனை முயற்சி: காஷ்மீர் முதல் குமரி வரை ராணுவ வீரர் சைக்கிள் பயணம்!