திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட தரை தொட்டி அமைக்கப்பட்டது. இங்கிருந்து வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு குடிதண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஒட்டநாகம்பட்டி காவேரி கூட்டு குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர அமைக்கப்பட்ட குஜிலியம்பாறையில் இருந்து வரும் ராட்சத குழாய் விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது.
தமிழ்நாட்டில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு அதை விலைகொடுத்து வாங்கி வரும் நிலையில், காவேரி கூட்டுக் குடிநீர் வீணாவதை சம்பந்தபட்ட அதிகாரிகள் அலட்சிய போக்குடன் கண்டுகொள்ளவில்லை என வேடசந்தூர் ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சம்பவ இடத்தில் இருந்த காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட நிர்வாக உதவி இயக்குநர் ஈஸ்வரன் என்பவரிடம் கேட்டபோது அவர் பதிளலிக்க மறுத்துவிட்டார் என பொதுமக்கள் கூறுகின்றனர்.