திண்டுக்கல் மாவட்டம், ரவுண்ட்ரோடு பகுதியில் ராஜேந்திரா திரையரங்கு உள்ளது. இதில் இன்று காலை 'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்துவிட்டு கூட்டமாக வெளியேவந்தவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாமரைபாடியைச் சேர்ந்த வேல்முருகன், வேடசந்தூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.
படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நிறுத்தாமல் சென்ற காரை அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்றனர். அப்போது காரை ஓட்டிச்சென்றவர் ராஜேந்திரா திரையரங்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள லட்சுமி சுந்தரம் காலனிவரை சென்று அங்குள்ள ஒரு வீட்டின் சுவரில் மோதினார். பின்னர் காரிலிருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனர்.