சென்னையில் யு-டியூப் சேனல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனுதர்மம் குறித்து பேசினார். அதில் அவர் மனுதர்ம நூலை மேற்கோள் காட்டி பெண்கள் குறித்து பேசியது விவாதத்திற்குள்ளானது. இந்தக் காணொலி சமூகவலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் அவர் இந்து மதத்தைப் புண்படுத்தியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் அனல் பறக்க, மறுபக்கம் அவர் சரியாகக் கூறியதாகவும் மனுதர்ம நூலில் அப்படிக் குறிப்பிட்டப்பட்டுள்ளதாகவும் இன்னொரு சாரர் ஆதரவுப் பதிவுகளிட்டு வருகின்றனர்.
இதனிடையே பாஜகவிலிருந்து திருமாவளவனின் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையத்தில் எம்பியும் விசிகவின் தலைவருமான திருமாவளவன் மீது பாஜக மகளிர் அணி தலைவி மாரியம்மாள் தலைமையில் மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
இதைப் போலவே, திண்டுக்கல் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்பி., திருமாவளவன் மற்றும் பெரியார் யு-டியூப் சேனல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மீனாட்சி அரவிந்த் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இணைந்து புகார் அளித்துள்ளனர்.
கரூரில் புகார்
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சிவசாமி தலைமையில், அக்கட்சியினர் தான்தோன்றிமலையில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்பி., திருமாவளவன் மீதும், பெரியார் யு-டியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர். அப்போது, பாஜக கரூர் மாவட்டப் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
வேலூரில் புகார்
வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணகுமாரி, பாஜகவின் மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் தலைமையில் பாஜக மகளிர் அணியினர் சார்பாக திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை வேலூர் மாவட்டக் காவல் குற்றப்பிரிவு டிஎஸ்பி மகேஷ் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க:பேச்சு சுதந்திரத்தை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா? - ப.சிதம்பரம் ட்வீட்