திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணக்கம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது உறவினரான மாரியம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்குச் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை வாரிசு சான்றுகளின் அடிப்படையில் சக்திவேல் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் தூண்டுதலின்பேரில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேலின் உறவினர்களான பன்னீர்செல்வம், அர்ஜுனன் உள்ளிட்டோர் மார்ச் 5ஆம் தேதி உயிரிழந்த மாரியம்மாளின் பெயரிலேயே மீண்டும் பட்டா மாறுதல் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இடத்தை அபகரித்துக் கொள்ள முயன்ற மூவர் மீதும் உடந்தையாக இருந்ததாக வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக்திவேல் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.