திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் செங்காந்தள் மலர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
சங்க கால இலக்கியத்தில் 99 வகையான மலர்களைப் பற்றி பாடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய இடத்தை செங்காந்தள் மலர் பிடித்து உள்ளது.
இது தவிர தமிழ்நாட்டின் மாநில மலராகவும் செங்காந்தள் உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் காலங்களில் ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, சாலையூர்நால்ரோடு, கோவில்பட்டி, ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்காந்தள் மலர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் புதர்களுக்கு இடையே கொடிகள் போல் படர்ந்து இச்செடிகள் வளர்ந்து உள்ளன.
'குளோரி யோசாசுபர்யா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட செங்காந்தள் மலர் செடிகளின் கிழங்குகளை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்படாது. மேலும் பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட அருமருந்தாகவும் இது விளங்குகிறது.
காடுகள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் செங்காந்தள் மலர்ச் செடிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் அழிவின் பட்டியலில் இவ்வகை மலர்ச் செடிகள் இடம் பிடித்துள்ளன. தற்போது வேடசந்தூர் சுற்றுப்பகுதியில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
செங்காந்தள் மலர்கள் உற்பத்தி அதிகமாகி வரும் நிலையில் இங்கு பணி செய்துவரும் பெண்கள் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக நாட்டுப்புற பாடல், தெம்மாங்கு பாடல் பாடி உற்சாகமாக வேலை செய்து வந்தது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: ஒரே நாளில் 3 இடங்களில் நடைபெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!