மலேசியா தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சின்னகண்ணு. இவர் அங்கு எண்டர்பிரைசஸ் தொழில் செய்துவருகிறார்.இந்நிலையில் சின்னக்கண்ணுவிற்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சஞ்சய், பழனி, சரவணன் என்ற ஆண் குழந்தைகளும் சங்கவி, மஞ்சிகா என்ற பெண்குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சின்னக்கண்ணுவின் மனைவி ஈஸ்வரி, தனதுகுழந்தைகளுடன் மலேசியாவிலிருந்து பழனி கோயிலுக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை பழனிக்கு வந்தவர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அருகேயுள்ள வரதமாநதி அணைக்கு வாடகைக்காரில் சென்றுள்ளனர். பழனி-கொடைக்கானல் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர்உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் மலேசியாவிலிருந்து வந்தவர்களை பழனியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வழிகாட்டியாக இருந்து சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச்சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சென்ற ஸ்கார்பியோ காரை, ராஜேஷ் தனதுநண்பரிடம் இரவல் வாங்கியதும், காரை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில்ஈஸ்வரி, மகன் சஞ்சய், காரை ஓட்டிவந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பழனி என்ற பத்து வயது சிறுவன் மற்றும் வழிகாட்டி ராஜேஷ் ஆகியோர் காயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பிய மூன்று குழந்தைகளையும் காவல் துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவம் பழனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.