தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில், அச்சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (21) என்ற இளைஞர் மீது சந்தேகம் உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த காரிமங்கலம் காவல் துறையினர் இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், காணாமல் போன பள்ளி மாணவியும், இளைஞர் பாலமுருகனும் கோயமுத்தூரில் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர், பள்ளி மாணவியை மீட்ட காவல் துறையினர், காவல் துறை காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், மாணவியைக் கடத்தியதாக கூறப்படும் இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த இளைஞரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.