ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாள்களுக்கும் மேலாக, இந்தியாவில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் திண்டாடி வந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் வரும் பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சோமனஅள்ளி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடைகளைத் திறக்கக் கூடாது என்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறந்தால் வெளியூர்ப் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள் என்றும்; கரோனோ தொற்று ஏற்பட வாய்புள்ளதால் மதுபான கடைகள் திறக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் பேச்சுவர்த்தை நடத்திய பிறகு, அப்பெண்கள் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தருமபுரியில் மேலும் ஒரு நபருக்கு கரோனா; கோயம்பேட்டால் நேர்ந்த விபரீதம்