தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேவுள்ள பூகானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி முத்துவேல். தனபால் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
தனபால் தனது மகள் திருமணத்திற்காக அதேபகுதையைச் சேர்ந்த குருபரன் மகன் முருகன், ஆண்டி மகன் முருகன் ஆகியோரிடம் தலா 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மூன்று வருடங்களாக கடனுக்கான வட்டியை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், திடீரென நேற்று (அக்.22) மாலை முத்துவேல் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் அவரது மகன் திருமுருகன் ஆகியோர் வீட்டில் இருந்தபோது கடன் வழங்கிய நபர்கள் இருவர் தனக்கு ஐந்து லட்சம் பணம் தரவேண்டும் எனக் கூறி வீட்டிலிருந்த மூதாட்டி மற்றும் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை வீட்டிலிருந்து வெளியேற்றி வீட்டில் பூட்டு போட்டுள்ளனர்.
இதணையறிந்து முத்துவேல் கடன் கொடுத்த நபர்களிடம் வீட்டு சாவி கேட்டுள்ளார். அதற்கு பணம் தந்தால் தான் சாவி தர முடியும் எனக் கூறியுள்ளனர் . இதனால் சொந்த வீட்டை விட்டுவிட்டு தனது உறவினர் வீட்டில் நேற்றிரவு தஞ்சமடைந்துள்ளனர்.
காலையில் முருகனிடம் கேட்டபோது தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர்கள் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய முத்துவேல், " தனது கணவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். வருவாய் இல்லாத காரணத்தால் தங்களால் கடனை அடைக்க முடியவில்லை. தங்களுக்கு கடன் வழங்கிய நபர்கள் கால அவகாசம் வழங்கினார்.
கடனை அடைத்து விடுகிறோம் தற்போதைய சூழ்நிலையில் வீட்டு வேலை செய்து தங்கள் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறோம் பத்து ரூபாய் பணம் கூட தங்களிடம் இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்