நல்லம்பள்ளி அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பச்சையம்மாள், பிக்கிலி கொல்லப்பட்டி மலைப்பகுதியில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
நாள்தோறும் அரசு பேருந்தில் பிக்கிலி கொல்லப்பட்டிக்கு சென்று வரும் பச்சையம்மாளுக்கு, அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு சீனிவாசன், பச்சைம்மாளிடம் குடும்ப தேவைக்காக எனக்கூறி 1.50 லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வாங்கிய பணத்தை, திருப்பிக் கொடுக்காமல் சீனிவாசன் காலம் தாழ்த்திவந்துள்ளார். பச்சையம்மாளுக்கு பணத்தேவை ஏற்படவே திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு சீனிவாசன் பணம் வாங்கியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து சீனிவாசன் மீது அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பச்சையம்மாள் புகார் தெரிவித்தார்.
அங்கு வந்த சீனிவாசன் காவல் நிலையத்தில் தான் பணம் வாங்கவில்லை, அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என மறுதலித்துள்ளார்.
நம்பிக்கையின் பேரில் பணம் கொடுத்த பச்சையம்மாளுக்கு மன அழுத்தமே மிஞ்சியது. மாவட்ட ஆட்சியர், எஸ்பி., என அடுத்தடுத்து பச்சையம்மாள் புகார் மனு கொடுத்துள்ளார். உரிய தீர்வு கிடைக்கவில்லை. விரக்தியடைந்த பச்சையம்மாள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பச்சைம்மாளை தடுத்துடன், அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். தன்னிடம் சீனிவாசன் வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதே பச்சையம்மாளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: திருமணம் ஊராட்சியில் பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சி