தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெறும் இட ஒதுக்கீடு போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவா் ஜி.கே.மணி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீடு போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்தான் பாமகவிற்கு முக்கியம் இட ஒதுக்கீட்டுக்கு பிறகுதான் தேர்தலைப் பற்றி சிந்திப்போம். தேர்தல் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸின் முடிவுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு. வன்னியர் உள்ஒதுக்கீடு போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன் நின்று போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. விபத்துகளை குறைக்க சாலையை அகலப்படுத்தி ஆறு வழிச் சாலையாக மாற்ற வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கடுமையாக முயற்சி செய்தார். நெடுஞ்சாலை சாலை ஆணையம் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. தொப்பூர் சாலையை அகலப்படுத்தி சாலை விபத்தை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.