தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே காளே கவுண்டனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை தினந்தோறும் குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. மேலும், தண்ணீர் விநியோகம் செய்ய டேங்க் ஆப்ரேட்டர் ஒரு வீட்டுக்கு ரூபாய் 50 கொடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒகேனக்கல் குடிநீர் சரிவர வழங்கப்படாததால், நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வெறுப்புக்குள்ளான காளே கவுண்டனூர் பொதுமக்கள் இன்று காலை அரசு பேருந்தை வழிமறித்து, காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.