தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணிக்கு ஆதரவாக அவரது மனைவியும் பசுமைத் தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி இன்று தருமபுரி உழவர் சந்தை, ஆவின் பால் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி கூறியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது அன்புமணி தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதைப்போலவே தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 13 நீர்த் திட்டங்களில் நான்கு நீர்த் திட்டங்கள் தற்போது ஆளுங்கட்சி துணையுடன் செயல்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது.
மீதமுள்ள அனைத்து நீர்த் திட்டங்களையும் செயல்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு வழங்கினால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும் .
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை நேரில் அன்புமணி வற்புறுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
தருமபுரி மக்களவை உறுப்பினராக இருக்கும்போது அன்புமணி தருமபுரியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மற்றவர்கள் தொகுதி விட்டு தொகுதி மாறி நின்று தேர்தலை சந்திப்பார்கள். ஆனால், தருமபுரி மக்களை நம்பியும் நிலுவையில் உள்ள திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும் மீண்டும் இதே தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறார். அதனால் பொதுமக்கள் அன்புமணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.