தருமபுரி: காளே கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த மாதுராஜ் அவரது மனைவி பொன்னி (55). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தருமபுரி கடைவீதி பகுதியில் உள்ள தனியார் நகை அடகு கடையில் 142 கிராம் கொண்ட வெள்ளி கொலுசினை 3000 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அடகு வைத்த வெள்ளி கொலுசினை திரும்பப் பெறுவதற்காக தருமபுரியில் உள்ள நகை அடகு கடைக்கு சென்று வட்டியுடன் மொத்த தொகை 6000 ரூபாயை செலுத்தி கொலுசினை பெற்றுச் சென்றுள்ளார். எடையில் சந்தேகம் அடைந்த பொன்னி மற்றொரு கடையில் கொலுசுகளை எடை பார்த்தபோது 101 கிராம் அளவு மட்டுமே இருந்துள்ளது.
இதில் அதிர்ச்சி அடைந்த பொன்னி, தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள வந்த உதவி காவல் ஆய்வாளர் பிரின்ஸ், நகை அடகு கடை உரிமையாளரிடம் இருந்து 140 கிராம் எடை அளவு கொண்ட வெள்ளி கொலுசினை பெற்றுத் தந்துள்ளார்.
இது குறித்து புகாரை திரும்ப பெறுவதற்கு காவல் நிலையத்திற்கு வந்தால் ஐந்தாயிரம் ரூபாயும், இங்கே முடித்துக் கொண்டால் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட நண்பரின் வீட்டிலேயே திருடிய காவலர் கைது