கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று மாலை ஆறு மணி முதல் 144 தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், தருமபுரியில் பொதுமக்கள் தங்கள் தேவைக்காக உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்தனர். மேலும், கடந்த சில தினங்களாக குறைந்திருந்த காய்கறிகளின் விலை, இன்று மூன்று மடங்கு உயர்ந்து விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து, நேற்று எட்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்து, சுமார் நான்கரை டன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மேலும், 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் விற்பனை ஆகின. குறிப்பாக, உழவர் சந்தை தொடங்கி இரண்டு மணி நேரத்திலேயே அனைத்து காய்கறிகளும் விற்று தீர்ந்தது. மேலும், உழவர் சந்தையில் காய்கறி வாங்க பொதுமக்கள் அதிக அளவு குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால்,ஒரு சிலர் எந்தவித முகக்கவசமும் அணியாமல் திரும்பியதால் மற்றவர்கள் கோபம் அடைந்தனர் .
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் இருமல் மற்றும் தும்மல் வரும்போது, துணி அல்லது மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனா். ஆனால் பொதுமக்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் எடுக்காமலும் இருந்தனா். இதனால், மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை போன்ற மக்கள் அதிகமாக வந்து அன்றாட பொருட்களை வாங்கக் கூடிய பகுதிகளில் அனைவருக்கும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: 110-விதியின் கீழ் விவசாயிகளுக்காக முதலமைச்சர் அறிவிப்புகள்