பென்னாகரம்: தருமபுரி மாவட்டம் நத்தஅள்ளி அடுத்த பொம்மசமுத்திரம் கிராமத்தில் லட்சுமணன் - கன்னியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் (2) இருந்தனர். இவர்கள் ஆண்டுதோறும் தர்பூசணி பழ சீசனில் வெளியூர் சென்று வியாபாரம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தர்பூசணி வியாபாரத்திற்காக கடந்த 3ஆம் தேதி மாலை நெக்குந்தி அடுத்த கல் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனது அக்கா வீட்டில் தனது ஆண் குழந்தையை விட்டுவிட்டு வெளியூர் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.6) மாலை கன்னியம்மாளுக்கு போன் செய்த அவரது உறவினர், குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனடியாக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து தனது அக்காவிடம் கேட்டபோது, தான் மாடு கட்ட வெளியே சென்றபோது இவை அனைத்தும் நடந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து கண்ணியம்மாள் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்!