தருமபுரி: பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு இருக்கும் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகையை பயன்படுத்திக் கொண்ட பரிசல் ஓட்டிகள் அரசு நிர்ணயத்தை கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றனர். மேலும், டிக்கெட்டுகளை பரிசல் ஓட்டிகள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்து வருகின்றன. முன்னதாக, மாமரத்துக்கடவு பரிசல் துறை முதல் மணல் மேடு வரை அரசு ரூபாய் 750ஐ கட்டணமாக நிர்ணயித்துள்ளது. தற்போது மாமரத்துக்கடவு பரிசல் துறை முதல் மணல் மேடு வரை ஒரு மணி நேரம் 30 நிமிடங்களுக்கு பரிசலில் செல்ல கட்டணம் இரண்டு மடங்காக அதிகரித்து 1500 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், பரிசல் ஓட்டிகள் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பரிசலில் பயணம் செய்ய நான்கு நபர்களுக்கு 4000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பரிசல் இயக்கப்படும் என பரிசல் ஓட்டிகள் அடாவடி செய்து வசூல் செய்கின்றனர். தர மறுக்கும் சுற்றுலா பயணிகளை ஆற்றில் மறுக்கரைக்கு அழைத்து சென்று திரும்ப அழைத்து வர மறுத்து மிரட்டல் விடுகின்றனர்.
இது சம்பந்தமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனா். பரிசல் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக வழங்கப்படும் பாதுகாப்பு கவசம் ‘லைஃப் ஜாக்கெட்’ என்றழைக்கப்படுகிறது. இந்த லைஃப் ஜாக்கெட் கிழிந்து துர்நாற்றம் வீசி வருவதால் சுற்றுலா பயணிகள் கிழிந்து போன லைப் ஜாக்கெட்டுகளை அணிய முன் வருவதில்லை.
இதன் காரணமாக பரிசலில் பயணம் செய்யும் நபர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் அபாயகரமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பான லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனவும் மேலும், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒகேனக்கலில் படகு சவாரிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கவசம் என்றழைக்கப்படும் லைஃப் ஜாக்கெட் தரமானதாக உள்ளதா? என ஆய்வு செய்து சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான லைஃப் ஜாக்கெட் வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:RN Ravi: உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!