தக்காளி சாகுபடி:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை, பேகர அள்ளி, மகேந்திர மங்கலம், ஜக்கசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
பாலக்கோட்டில் தக்காளிச் சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு செல்கின்றனர். பின்னர், தக்காளி தரம் பிரிக்கப்பட்டு சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்டப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தக்காளி விலை சரிவு:
இரு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கிலோ 6 ரூபாயாக குறைந்துள்ளது. விவசாயிகளிடம் கிலோ 6 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளி, வெளிச்சந்தையில் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்குக்காரணம் இடைத்தரகர்கள் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
விளைச்சல் அதிகம், விலை குறைவு:
இதேபோல் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த தும்பல்பட்டி, பெரமனூர், கோம்பைக்காடு உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
வேரழுகல், வாடல் நோய், செம்பேன் உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் பாதுகாப்பு செய்து விளைச்சலை அதிகப்படுத்தி உள்ளதாகவும், ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இரு மாதங்களுக்கு முன் ஒரு பெட்டி 500 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதாக அவர்கள் கூறினர்.
சேலம், தருமபுரி மட்டுமின்றி தக்காளி விலை சரிவால் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாடுகளுக்கு உணவு:
தக்காளி பயிரிட செய்த செலவுக்குக்கூட வருமானம் கிடைக்காததால், வேதனையில் உள்ள விவசாயிகள், வயல்வெளிகளில் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். விலை ஏற்றமும், இறக்கமும் வாடிக்கையான ஒன்றுதான். சில வாரங்களில் தக்காளி நிலையான விலைக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில மாதங்களாக மிகக்குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்படுவது வேதனையிலும் வேதனை. சரி, தக்காளி நிலையான விலைக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
தக்காளியை கூழாக்கும் இயந்திரம்
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலேயே முதன்முறையாக அதிக விளைச்சலால் தேக்கமடையும் தக்காளியை கூழாக்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் கொண்ட பிரத்யேக வாகனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக அனுப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிக அளவில் தக்காளியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கூழாக்கும் இயந்திரத்தை தோட்டங்களுக்கு வரவழைத்து தக்காளியை சாறு பிழிந்து கொள்ளலாம் என வேளாண் உற்பத்தி ஆணையர் ககன் தீப் சிங் தெரிவித்தார்.
விவசாயிகள் வலியுறுத்தல்:
தக்காளியைச் சேமித்து வைக்க முக்கிய இடங்களில் குளிர்பதன சேமிப்புக்கிடங்குகளை அமைக்க வேண்டும். பதப்படுத்திய தக்காளியை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் விலையேற்றத்தின்போது மக்களையும், விலை சரிவின்போது விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.