தருமபுரி: காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தாம்சன்பேட்டையில் சிவசங்கர் என்பவர், இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் இன்று(ஜன.25) மாலை தனது தங்கை லாவண்யா மற்றும் இந்துமதி ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தருமபுரியை நோக்கி சென்றபோது, இருசக்கர வாகனம் பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே மேம்பாலத்தில் இருந்து கீழ இறங்கும்போது பின்னால், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரிக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் (வயது 29). லாவண்யா (வயது 25). இந்துமதி (வயது 22) என மூவரும் உயிரிழந்தனர்.
சிவசங்கரின் மகள் லாவண்யாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் அவர் பல் சிகிச்சைக்காக தருமபுரிக்கு தனது சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இவ்விபத்து நேர்ந்துள்ளது. மேலும், மணிகண்டன் தனது இரண்டு சகோதரிகளையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே இன்று மாலை சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து, காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று சடலங்களையும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த மகன், இரண்டு மகள்கள் என மூன்று பேரும் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கானா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு; ஆவேசத்தில் இளைஞர் படுகொலை!