தர்மபுரி: பென்னாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 1லட்சத்து 65ஆயிரம் கனஅடியாக உள்ளது. காவிரி ஆற்றின் தமிழ்நாடு எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டத்தின் காவிரி கரையோர மலைத்தொடர்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று(அக்.17) காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடியாகவும் நண்பகல் நிலவரப்படி 1லட்சத்து 65ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. வழக்கமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றினால் மட்டுமே நீர்வரத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கும் ஆனால் கர்நாடக அணைகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் குறைவான கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது, இருப்பினும் மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆறுகளில் உள்ள பாறைகள் முற்றிலும் மூழ்கி பரந்து விரிந்த வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் ஐவர் பவனி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏழாவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தேர்வு மொழி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குமரியில் கனமழை.. திற்பரப்பு அருவியில் குளிக்க தடை