தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் பிரசித்திப்பெற்ற தட்சணகாசி காலபைரவர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் சிறப்பு, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சாமியை தரிசனம் செய்து சாம்பல் பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில், இக்கோயிலில் நேற்று நடைபெற்ற தேய்பிறை அஷ்டமியையொட்டி, பக்தர்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கோயிலில் சாம்பல் பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகைபுரிந்தனர். பக்தர்கள், சுமார் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதியமான் கோட்டை காலபைரவர் ஆலயத்திற்கு தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் - கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.