தருமபுரி: தமிழ்நாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் மாநில அளவில் சுமார் 50,000 கோவிட் தடுப்பூசி முகாம்களில் மாலை 4.30 மணி அளவில் சுமார் 11 லட்சத்து 7 ஆயிரத்து 333 பேருக்கு கோவிட் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 1924 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 23,840 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா போன்ற போதை பொருட்களை, தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மாநில காவல்துறை தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கஞ்சா கடத்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, ஆந்திராவில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த, 4000 கோடி மதிப்பிலான கஞ்சா பயிர்களை தமிழ்நாடு காவல் துறையினர், ஆந்திரா சென்று அடையாளங்கண்டு அழித்துள்ளனர். தமிழ்நாட்டில் தக்காளி காய்ச்சல், குரங்கம்மை நோய் பாதிப்புகள் இதுவரையில் இல்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கச்சத்தீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... இணை அமைச்சர் முரளிதரன்...