தருமபுரி: தருமபுரி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்திருவிழாவில் குழு நடனம், தனி நடனம், கும்மி பாட்டு, கிராமிய பாடல்களுக்கு நடனம், மேற்கத்திய நடனம் ஆகியன இடம்பெற்றன. 33 வகையான கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற கலைத் திருவிழாவில், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்.
பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் என்றாலே நடன வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்ற நகர்ப்புற மாணவர்களே அதிக பங்கெடுப்பர். ஆனால் இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கிராமப்புற மாணவ, மாணவிகளே அதிக பங்கெடுத்து, தங்களது திறனை வெளிப்படுத்தினர். கோலாட்டம், கம்பு சுத்துதல், மாரியம்மன் நடனம் போன்றவை பார்ப்பவர் மனதில் ஆனந்த கூச்சலிட்டன. பாரம்பரிய உடை அணிந்து மலைக் கிராம படுகர் பாடலுக்கு மாணவர்கள் ஆடிய நடனம் காண்போரை நெகிழ்வடையச் செய்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை சிறப்பாகச் செய்து இருந்தாலும், ஒலிபெருக்கிகள் ஏதும் இல்லாமல் ப்ளூடூத் அளவிலான சிறிய ஸ்பீக்கர்களை கொண்டே பல போட்டிகள் நடைபெற்றன. சிவன், பார்வதி வேஷத்தில் தத்ரூபமாக நடித்துக் காட்டி அசத்திய மாணவிகளுக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஒருபுறம் மாணவர்கள், ஆசிரியர்களின் செல்போன் இசையில் ரிகர்சல் செய்து தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்த கலைத் திருவிழா, தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெறக்கூடிய மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பங்கு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம்:நிலம் கையடுக்கப்படுத்தும் பணிக்கு ரூ.50 கோடி விடுவிப்பு - எம்.பி செந்தில்குமார்!