தருமபுரியில் திமுக தேர்தல் பொதுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், கூட்டத்தில் பங்கேற்ற 246 திமுக உறுப்பினர்களுக்கு பொற்கிழி பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் தலைமை உரையாற்றிய மு.க.ஸ்டாலின், `தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற ஜப்பான் சென்று நிதி பெற்று வந்து, இத்திட்டத்தை கொண்டு வந்தோம். திமுக ஆட்சிக் காலத்தில் 80 விழுக்காடு கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்தது .
அடுத்து வந்த அதிமுக அரசு, திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அத்திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் வேறு வழியின்றி அதிமுக அரசு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியது.
அதுபோல, தான் அறிக்கையை வெளியிடாமல் இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா சுருட்டிக் கொண்டு ஓடி இருப்பார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்த்ததை அமைச்சர் அன்பழகன் எதிர்த்தாரா? சூரப்பாவின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டது அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா? ஒரு பணியிடத்திற்கு சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் தான் நியமிக்க வேண்டும் என சூரப்பா சொல்லியது அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
தருமபுரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை 15 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. அடையாளம் அணைக்கட்டிலிருந்து துள்செட்டி ஏரி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டம், தான் வெற்றி பெற்றவுடன் கொண்டுவரப்படும் என, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அன்பழகன் வாக்குறுதி அளித்தார். ஆனால் 10 ஆண்டுகளாகியும் அதனை நிறைவேற்றினாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
தர்மபுரியில், வத்தல்மலை சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. முதலமைச்சர் பற்றி பேசிய ஸ்டாலின் சென்னையில் உள்ள பாலங்கள், தான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது என்பதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். சென்னையில் எங்கு சுத்தினாலும் நான் கட்டிய பாலங்கள் மேல் தான் பயணம் செய்ய வேண்டுமே தவிர வேறு வழி கிடையாது.
அதிமுக ஆட்சி குறித்து அன்புமணி ராமதாஸ் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். கிரானைட் ஊழல், சட்டவிரோதமாக தாது மணல் கொள்ளை ஊழல், மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தேவையில்லாத தாமதம், மின்சார கொள்முதலில் ஊழல், கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவது ஊழல், பொது விநியோகத்திற்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல், ஆவின் பால் ஊழல் என்று இவ்வளவு பெரிய பட்டியலேயே ஆளுநரை நேரடியாக சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் ஊழல் அதிகமாக உள்ளது. 2011-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் அனைத்து துறையிலும் ஊழல். ஜெயலலிதாவை தொடர்ந்து வந்த ஆட்சியிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த பட்டியல் பழைய நிலை தற்போது இருந்தால் அது நூற்றுக்கணக்கில் தாண்டி போகும் அளவுக்கு ஊழல் நாற்றமெடுக்கும் அரசு தான் இந்த எடப்பாடி அரசு` என பேசினார்.