தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவருபவர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (16). பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தற்போது 11ஆம் வகுப்பு சேரத் தயாராக இருந்தார்.
ஹேமலதாவுக்கு வாணியாறு அணை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்வரின் மகன் குமார் (21) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில நாள்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹேமலதா மரணம்
இதன் காரணமாக விரக்தியடைந்த இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயற்சி செய்தனர். இதில் ஹேமலதாவை மட்டும் விஷத்தைக் குடிக்க வைத்துவிட்டு, காதலன் குமார் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
விஷம் குடித்து உயிருக்குப் போராடிய நிலையில் மாணவி ஹேமலதா பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி ஜூன் 19 நள்ளிரவில் உயிரிழந்தார்.
காதலன் கைது
இச்சம்பவம் ஈழத்தமிழர் வாழுகின்ற அகதிகள் முகாமில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து. உடற்கூராய்வு முடிந்து உடல் வாணியாறு அணை முகாமிற்கு வந்தபொழுது முகாமில் இருந்தவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரவிக்குமார், பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்கள், காவலர்களைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவலர்கள், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டது. கோரிக்கையை ஏற்று காதலன் குமார் கைதுசெய்யப்பட்டதின் பேரில் காவலர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'சீமானை கைது செய்ய வேண்டும்' - வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி!