தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் மூக்காரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, வெங்கடசமுத்திரம், பொம்மிடி ஆகிய 4 இடங்களில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், கரோனா தொற்று பாதிப்பு காரணத்தினால் தேர்வு எழுதும் சூழல் மாணவர்கள் மத்தியில் இல்லை. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கல்லூரி படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பில் ஆறாவது பருவத் தேர்வு, முதுகலை பட்டப்படிப்பில் நான்காவது பருவத்தேர்வு, பொறியியல் பட்டப்படிப்பில் எட்டாவது பருவத்தேர்வு ஆகியவை இறுதி தேர்வுகள் என்பதால் நீதிமன்ற உத்தரவுபடி தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களின் பொருளாதார நிலையை எண்ணியும், ஓராண்டு கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டு படிப்பை மாணவர்கள் தொடர்வதில்லை என்ற காரணத்தினாலும் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைக் காட்டிலும் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பை உருவாக்கும் வகையில் முதற்கட்டமாக 2,000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலங்கை தாதாவின் கூட்டாளி மதுரையில் தலைமறைவு: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி