தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மே மாதம் 5ஆம் தேதி 46 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், 5 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் சேலம் மத்திய சிறை வார்டனாக பணியாற்றிய பெருமாள் என்பவருக்கு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து ரகசியமாக பெருமாளை தனிப்படை காவலர்கள் கண்காணித்து வந்தனர். பின் சில தினங்களுக்கு முன்பு சிறை வார்டன் பெருமாளிடம் விசாரணை செய்தனர்.
அதில், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய செந்தில், கார் ஓட்டுநர் இளவரசன், ஓமலூரைச் சேர்ந்த சின்னசாமி, சேலம் பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமதி ஆகியோருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருந்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து செந்தில், இளவரசன், சின்னசாமி, சுமதி ஆகிய நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கார், இரு சக்கர வாகனம், கொள்ளையடிக்கப்பட்ட 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார்.