தருமபுரி: பென்னாகரம் தாலுகா கெண்டேனஹள்ளி ஊரைச் சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் மாதம்மாள் தம்பதியினர். இவர்களின் மகள் ரம்யா. இவர் பிறந்தது முதல் காதுகேளாமல், வாய் பேச முடியாமல் இருந்து வந்தார். இதனால் தனியார் வாய் பேச முடியாத, காதுகேளாத பள்ளியில் கல்வி கற்க சேர்த்து விட்டனர். கடந்த 2002 ஆம் ஆண்டு 10 வயதாக இருக்கும் பொழுது பள்ளி சார்பில், குழந்தைகளுடன் மைசூருக்கு சுற்றுலா சென்றனர். அந்த சுற்றுலாவில் ரம்யா தொலைந்து போனார்.
ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளைத்தேடும் முயற்சியை கைவிட்டனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத பெண் ஒருவர் மும்பையில் உள்ளார் என இளம் பெண்ணின் புகைப்படமும், அவர் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயரையும், புகைப்படம் எடுத்து சென்னையில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் அமைப்பிற்கு அனுப்பினர்.
தமிழகம் முழுவதும் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத அமைப்பினர் தங்களுக்குள் தொடர்பு வைத்துள்ளதால், இளம் பெண்ணின் கையில் பச்சை குத்தியிருந்த புகைப்படம் மற்றும் அந்த பெண்ணின் புகைப்படத்தை மாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்தனர். ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு, காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என நினைத்து அவர்களது பெற்றோரை இந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு, புகைப்படம் மற்றும் கையில் இருந்த பச்சை குத்திய இடங்களை பார்த்து உறுதி செய்தனர்.
உடனடியாக மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்த அமைப்பினரை தொடர்புக்கொண்டு பெண்ணை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்து, சென்னையில் இருந்து தருமபுரி ரயில் நிலையம் வளாகத்தில் பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் வெங்கடேஷ் பழனிச்சாமி இளம் பெண்ணுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையும் படிங்க:காவிரி விவகாரத்தில் கார்நாடக முதலமைச்சரிடம் பேசாதது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கம்