தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நிரம்பும் பட்சத்தில், அரூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்கும்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து அரூர் ஏரியை தூர்வர பொது மக்கள் முன்வந்துள்ளனர். இதற்கு அழகு அரூர் என்ற அமைப்பை தொடங்கி பொதுமக்கள் பங்களிப்போடு ஏரியை தூர் வாரும் பணியில் இறங்கியுள்ளனர். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை முழுமையாக பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
முதல் கட்டமாக அரூர் பெரிய ஏரியை சுமார் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரி உள்ளனர். இந்த ஏரி முழுவதும் தூர்வாரி, பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் சுற்றிலும் நடைபாதை அமைக்க உள்ளனர்.
மேலும், ஏரியின் நடுவில் தீவுகள் போன்று உருவாக்கி பழ வகை மரங்கள் வளர்த்து பறவைகள் வந்து செல்லும் வசதிகள் ஏற்படுத்தி ஒரு பொழுதுபோக்கு பூங்கா போன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.