சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை தனது யூ-ட்யூப்பில் வெளியிட்டுவந்தவர் மதன். இதனால் பப்ஜி மதனைக் கைது செய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு இரண்டு புகார்கள் வந்தன.
160-க்கும் அதிகமான புகார்கள்
மேலும் தமிழ்நாடு முழுவதும் 160-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் காவல் துறைக்குப் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மதனை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
வி.பி.என். வைத்து விளையாடிய மதன்
ஆனால், வி.பி.என். சர்வரை பயன்படுத்தி தனது இருப்பிடத்தைத் தொடர்ச்சியாக மதன் மாற்றிவந்தார்.
இந்நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்தபோது மதனின் மனைவி கிருத்திகாவை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆபாச உரையாடலில் பல லட்சம்
அப்போது, மதனின் யூ-ட்யூப் சேனலுக்கு அட்மினாக அவரது மனைவி கிருத்திகா இருப்பது தெரியவந்தது. மேலும் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து மூன்று சொகுசு கார்கள், இரண்டு பங்களாக்கள் என ஆடாம்பர வாழ்க்கை வாழ்ந்துவந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, மதனுக்கு உடந்தையாகச் செயல்பட்டுவந்த கிருத்திகாவை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரியில் மதன் சுற்றிவளைப்பு
இந்நிலையில் கிருத்திகாவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பப்ஜி மதன் தர்மபுரியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
தனிப்படை காவல் துறை
இதனையடுத்து, தர்மபுரிக்கு விரைந்த தனிப்படை காவல் துறை, பப்ஜி மதனை கைதுசெய்தது. அவரிடமிருந்து டேப், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
காலில் விழுந்து கெஞ்சிய மதன்
முன்னதாக மதன் காவல் துறையிடம் பிடிப்பட்டவுடன் கண்ணீருடன் காலில் விழுந்து விட்டுவிடுமாறு கெஞ்சியதாகவும், மனைவி, குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
மேலும் ஆபாசமாகப் பேசி பதிவிட்டு பல சொத்துகளைக் குவித்தது உண்மைதான் எனவும் மதன் ஒத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவரது டேபை சோதனை செய்தபோது யூ-ட்யூபில் பதிவேற்றுவதற்காகத் தயாராக வைத்திருந்த பல காணொலிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் பயன்படுத்திவந்த சொகுசு காரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
கைதுசெய்த மதனை சென்னைக்கு அழைத்துவரும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். சென்னைக்கு அழைத்துவந்து மதனிடம் காணொலி குறித்தும் ,பணம் பறிப்பில் ஈடுபடுவது குறித்தும் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கணக்கு முடக்கம்
மேலும் மதனின் வங்கிக்கணக்கை சைபர் கிரைம் காவல் துறையினர் முடக்கியுள்ளனர். அந்த வங்கிக்கணக்கில் ரூ 4 கோடி இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகளா? முதலமைச்சர் நாளை ஆலோசனை