மத்திய அரசு 2019ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கிசான் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.6000 வீதம் 3 தவணைகளாக வழங்கும் வகையில் சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி கடலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனா். தொடா் விசாரணையில் வேளாண் அலுவலகத்தில் அலுவலக கணினி மையத்தில் களப்பணியாளர்களை அழைத்து முதல் கட்டமாக நான்கு பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பென்னாகரம் பகுதியில் தற்காலிக களப்பணியாளராக பணியாற்றிய மீனா கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
5ஆவது நாளாக இன்று (செப்டம்பர் 9)11 பேரிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இன்று ஒரு சிலரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. விசாரணையில் வேளாண் அலுவலக பணியாளர்கள், கணினி மையத்தினர் முறைகேடு செய்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், வெளிமாநிலம் மற்றும் மாவட்டகளிலிருந்து தருமபுரி மாவட்ட விவசாயிகள் வங்கிக் கணக்கில் கிசான் திட்ட நிதி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து அவர்களிடமும் சிபிசிஐடியினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனா்.
இதையும் படிங்க:பிரதம மந்திரி கிஷான் உதவி திட்டத்தில் ரூ. 110 கோடி மோசடி!