தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கவியரசு. இவர் சாக்பீஸில் கத்தி, கிரீடம் போன்றவற்றை வடித்துள்ளார். நாளடைவில் சாக்பீஸின் மூலமாக ஒரு சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணிய கவியரசு இதுவரையில் யாரும் செய்திடாத வகையில் சிற்பங்களை சாக்பீஸில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவந்துள்ளார்.
ஒரு இன்ச் சாக்பீஸில் முருகன், மதுரை மீனாட்சியம்மன், விநாயகர், ஆயிரங்கால் மண்டபம், புத்தர் சிலை என தொடர்ச்சியாக பலவற்றை சிற்பமாக செய்துள்ளார். இதுதவிர பத்து தலை ராவணன் சிற்பம், சங்கிலி, தூணில் உருளக்கூடிய பந்து ஆகியவற்றையும் செய்துள்ளார். மேலும் கின்னஸ் சாதனை படைத்த 2.5 மில்லி மீட்டர் உயரத்தை மிஞ்சும் அளவில் இரண்டு மில்லி மீட்டர் உயரத்திற்கு புத்தர் சிலையை வடிவமைத்துள்ளார்.
இவற்றையெல்லாம் நுட்பமாக செதுக்கியும் கின்னஸ் சாதனைக்கான போட்டியில் கலந்து கொள்ள வழிமுறைகள் தெரியாமல் இருந்த மாணவனுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி வழிகாட்டினார். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது மாணவன் கவியரசு சாக்பீஸில் 4 நிமிடம் 29 நொடிக்குள் 6 மி.மீ. அளவில் செதுக்கிய புத்தர் சிலை சிற்பம் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இதற்கான கேடயம், பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மலர்விழி மாணவனுக்கு வழங்கி பாராட்டினார். தனது இலக்கை அடைய வழி காட்டிய மாவட்ட ஆட்சியருக்கு மாணவன் கவியரசு நன்றி தெரிவித்தார்.