தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கும்மனூர் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பஞ்சப்பள்ளி ஓட்டர்திண்ணை பகுதியை சேர்ந்த விஜி என்பவர் சந்தேகமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பஞ்சப்பள்ளி காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இறந்த இளைஞர் பஞ்சப்பள்ளி ஒட்டர் திண்ணைப் பகுதியைச் சேர்ந்த மாதேவன் வசந்தா தம்பதியின் மகன் விஜி (24) என தெரியவந்தது. இவர், பெங்களூரு பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார். இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி பிக்கன அள்ளி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ராஜேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், விஜியின் மனைவியான ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ், அவரது உறவினர்கள் சித்துராஜ், மகாலிங்கம், வீரமணி, ஆறுமுகம், சங்கர் உள்ளிட்ட 6 பேர் விஜியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து சடலத்தையும் அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் கும்மனூர் சாலையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர், பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நீதிமன்ற உத்தரவு படி அவர்கள் 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.