கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடும் தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சேலம் டி.ஐ.ஜி.க்கும், தர்மபுரி எஸ்.பி.க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உள்ள அசரகசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், இளங்கோவன் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த தொகையைத் திருப்பி செலுத்தாததால், இளங்கோவன், பெரும்பாலை காவல் நிலையத்தில் பிரகாஷ் மீது புகார் அளித்துள்ளார்.
சிவில் பிரச்சனை தொடர்பான இந்த புகார் குறித்து விசாரிக்க காவல் நிலையத்துக்கு வரவழைத்த உதவி ஆய்வாளர்கள் மதியழகன், பெருமாள், சிவகுரு ஆகியோர், தன்னை மிரட்டி கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், "காவல் நிலையத்தில் நடந்த கட்டபஞ்சாயத்தின்படி, அதிக வட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று கொடுத்ததாகவும், மீத தொகையை மூன்று தவணைகளாக திருப்பிக் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறினேன்.
ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மீத தொகையை பின்னாளில் தருவதாகக் கூறி, அதை இளங்கோவனும் ஏற்றுக் கொண்ட நிலையில், காவல் துறையினர் தனது வீட்டுக்கு வந்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னை பொய் வழக்கில் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டியதாகவும்" மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரும்பாலை காவல் நிலையத்தில் நடக்கும் இந்த கட்ட பஞ்சாயத்தை தடுக்கக் கோரியும், சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேலம் டி.ஐ.ஜி.க்கும், தர்மபுரி எஸ்.பி.க்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உதவி ஆய்வாளர்களுக்கு எதிரான புகாரை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க சேலம் சரக டி.ஐ.ஜி.க்கும், தர்மபுரி எஸ்.பிக்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.