தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேகலா கலந்துகொண்டு சிசிடிவி கேமரா நிறுவும் பணியை தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம், பென்னாகரம் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பென்னாகரம் நான்கு ரோடு பகுதி, ஒகேனக்கல் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் இந்த 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதில், எட்டு கேமராக்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஐபி கேமராக்களாகும். தமிழ்நாட்டில் சென்னை, கோவையைத் தொடர்ந்து பென்னாகரத்திலும் உயர் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
எனவே, இந்த கேமராக்களின் உதவியால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் மற்றும் வாகனங்களின் எண்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் காட்டுப்பகுதிக்குள் சுற்றித்திரியும் சில சமூக விரோதிகளின் செயலை தடுக்க இந்த அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்பு பென்னாகரம் பகுதியில் சமூக விரோதிகள் எவரும் 'ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது' என்ற நிலை உருவாகும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.