கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடகா மாநிலம் தேவனாங்குந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் குழாய் வழியாக பெட்ரோலிய பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தக் குழாய் அமைக்க கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களில் குழாய்கள் அமைத்து அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களை எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. பெட்ரோலிய குழாய் அமைக்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளருக்கு கடந்த சில தினங்களுக்கு முன், முறையாக விவசாயிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி பகுதியில் விவசாயிகளை ஒன்றிணைத்து அரசு தரப்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டத்துக்கு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை அழைக்காமல், சம்பந்தமில்லாத ஆட்களை வைத்து கூட்டம் நடத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 4000 ஏக்கர் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்பட உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அரசு முறையாக சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்தப் பெட்ரோலிய குழாய், தருமபுரி அருகே உள்ள நாகாவதி அணை, காவேரி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. வருங்காலங்களில் இந்த குழாய்களில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டு, பெட்ரோலியம் கசிந்தால் இங்குள்ள காவிரி ஆற்றிலும், நாகாவதி அணையிலும் கலக்கும் அபாயம் உள்ளது.
இதனால் 2 கோடி மக்களின் குடிநீர், வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோலிய குழாய் அமைக்கப்படும் விவசாய நிலங்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், தகவல்களை கேட்டு பெரும்பாலை, சின்னம்பள்ளி, நாகாவதி அணை, அரக்காசனள்ளி, நாகர்கூடல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் தனித்தனியாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.