தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மக்கள் தேவைக்கான நிதியை ஒதுக்கக்கோரி 20க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், "தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 32 பஞ்சாயத்துகளில் கடந்த டிசம்பர் மாதம் ஊராட்சி மன்றத்திற்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று ஒன்பது மாதங்கள் ஆகியும், ஊராட்சி மன்றத்திற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. கிராமப்புறங்களில் பல்வேறு பணிகளை செய்துள்ள நிலையில், அதற்கான நிதி கிடைக்கப்பெறவில்லை.
மேலும், குடும்பத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்திலேயே ஒப்பந்தம் கோரப்படுகிறது. அந்தப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
அனைத்து கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.