தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில், நூலஅள்ளி கிராமத்தில் மொத்தம் 93 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கோயில் திருவிழாக்கள், ஊர் பொது நிகழ்ச்சிகளுக்காக மக்கள் சார்பில் தங்களுக்குள்ளேயே பணம் வசூலித்து, சேமித்து வைத்திருப்பது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஊரின் பல குடும்பத்தினர் வேலை இழந்து, அன்றாடத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல், தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
இந்நிலையில், இந்த ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தாங்கள் சேமித்து வந்த ஒரு லட்சத்து 86,000 ரூபாய் பொதுப்பணத்தைப் பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, ஊரின் முக்கிய பிரமுகா்களைக் கொண்டு, வீட்டிற்கு தலா 2000 ரூபாயும், மளிகைப் பொருட்களையும் வழங்க முடிவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மேகலா, வட்டாட்சியா் சேதுலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, ஊர் பொதுமக்களுக்கு நிதி உதவி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா். இது, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட நாட்களைக் கடத்தி வந்த அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆறுதலாய் அமைந்தது.
இதையும் படிங்க : முயல் வேட்டையாடிய இருவர் கைது - ரூ.12 ஆயிரம் அபராதம்!