தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2016-17ஆம் ஆண்டு நிதியாண்டில் அப்போதைய தருமபுரி எம்பியாக இருந்த அன்புமணி ராமதாஸ் ரூ. 5 லட்சம் செலவில் குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த குடிநீர் நிலையம் கடந்த ஆறு மாதங்களாக செயல்படாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடைகளில் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சமூக ஆர்வலர் ஜீவானந்தம் தெரிவித்ததாவது, "பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் இங்கு இன்னும் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்கு வரும்போது, அவர்களை தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இங்குள்ள மருத்துவர்கள் அனுப்பி விடுகின்றனர்.
மேலும் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் குடிநீர் நிலையம் செயல்படாததால் நோயாளிகள் கடைகளில் விலை கொடுத்து தண்ணீரை வாங்குகின்றனர். இது குறித்து கேட்டதற்கு அதன் நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர். ஆகவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தண்ணீர்ப் பற்றாக்குறை: வேதனையில் குறவர் சமூகம்!