கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பூவத்தி காப்புக்காடு பகுதியிலிருந்து, இரண்டு யானைகள் நேற்றிரவு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியின் காடுகள் வழியாக பயணம்செய்து இன்று (மார்ச் 6) காலை சிக்க மாரண்டஅள்ளி ஜக்கசமுத்திரம் பகுதியிலுள்ள, வேளாண் நிலத்தில் புகுந்தன.
இதனையடுத்து, வேளாண் நிலத்தில் யானை புகுந்தது என அப்பகுதி மக்கள் பாலக்கோடு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பத்துக்கு மேற்பட்ட வனத் துறை அலுவலர்கள், யானையைப் பாதுகாப்பாக காடுகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது யானை வட்டுகானப்பட்டி காப்புக்காட்டில் உள்ளது. கோடைகாலம் என்பதால் காட்டுப்பகுதியில் போதிய அளவு தண்ணீர், உணவு இல்லாததால் காடுகளிலிருந்து வெளியேறி உணவு தேடி வேளாண் பகுதிகளில் யானை புகுந்துள்ளது.
யானையை வனத் துறையினர் மலையூர் பகுதியிலுள்ள காப்புக்காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் எம்எல்ஏ.,வை தாக்கிய பெண் காவல் ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்