கரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வட மாநில கூலித் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி கிராமத்தில் தங்கி உள்ளனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்தார் நகர் பகுதியைச் சேர்ந்த 39 தொழிலாளர்கள் பென்னாகரம் பகுதியில் கூலி வேலை செய்தும் சாலை ஓரங்களில் போர்வை விற்பனை செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் பென்னாகரம் பருவதனஅள்ளி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு நான்காவது கட்டத்தில் சில தளர்வுகள் உடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழ்நாடு அரசு தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்து அனுப்பி வருகிறது.
பென்னாகரம் பருவதன அள்ளி சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ள 39 தொழிலாளா்களையும் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அங்கிருக்கும் கூலித் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தங்களிடம் பணம் எதுவும் இல்லை என்றும் தங்களது குடும்பத்தார் உத்தரப் பிரதேசத்தில் வருவாய் இன்றி தவித்து வருவதாகவும் தருமபுரியில் இருந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பினால் அங்கிருந்து கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வோம் என்றும் கண்ணீர் மல்க தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க... ஊருக்கு செல்ல அனுமதி கேட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்!