தர்மபுரி: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக் குறைவாக உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய பணிமனைகளில் இருந்து பேருந்து இயக்கம் இன்று தொடங்கியது.
புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்டப் பிற மாவட்டங்களுக்குப் பேருந்து இயக்கப்படுகிறது.
கர்நாடக மாநில எல்லை வரை பேருந்து இயக்கம்:
பெங்களூருவிற்குப் பேருந்து இயக்கம் இல்லாததால், ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல சேலம் மாவட்டத்திற்கு பேருந்து சேவைக்கு அனுமதியில்லாத காரணத்தால் மாவட்ட எல்லையான தொப்பூர் வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது.
தர்மபுரியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பயணிகள் சேலம் வழியாக கோவை, நாமக்கல், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளுக்குப் பயணம் செய்வது வழக்கம். முக்கியமான இரண்டு பகுதிகளுக்கும் பேருந்து சேவை இல்லாத காரணத்தால் போதிய மக்கள் கூட்டம் இன்றி பேருந்து நிலையைம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தர்மபுரி மண்டலத்தில் மொத்தம் 853 அரசுப்பேருந்துகள் உள்ளன. அதில் தற்போது, 155 புறநகர் பேருந்துகள், 251 டவுன் பேருந்துகள், 37 மாற்று பேருந்துகள் என மொத்தம் 443 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என மண்டல மேலாளர் ஜீவரத்தினம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி