முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று (செப். 29) சேலம் சென்றார். இதனைத்தொடர்ந்து தருமபுரியில் இன்று (செப்.30) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே சேலத்திலிருந்து சாலை வழியாகத் தருமபுரி சென்ற ஸ்டாலின், வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளைப் பார்வையிட்டு, எத்தனை காவலர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரத்தைக் கேட்டறிந்தார்.
கலைஞர் திறந்து வைத்த காவல்நிலையம்
காவல் ஆய்வாளர், அதியமான் கோட்டை காவல் நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1998 ஆம் ஆண்டு திறந்து வைத்ததாக தெரிவித்தார். பிறகு பணியிலிருந்த காவலர்களிடம், காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறித்து கேட்டறிந்தார். அவரிடம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் புகார்கள் வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.
குறைகள் என்ன?
நிலப்பிரச்சனை குறித்து அதிக புகார் வருவதால் வருவாய்த்துறையினர் மூலம் தீர்த்து வைத்த விவரங்களை காவலர்கள் காண்பித்துள்ளனர். தொடர்ந்து, காவலர்களுக்கு சரியாக வார விடுப்பு வழங்கப்படுகிறதா? என்று கேட்ட முதலமைச்சர் அவர்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சேலத்தில் ரூ.24.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்