தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன் கூறியதாவது,
"தருமபுரி மாவட்டத்தில் நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மொத்தம் 69 பேர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இதில் 28 நாட்களை கடந்து நல்ல நிலையில் 22 பேர் உள்ளனர். மற்ற 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களும் 28 நாட்கள் கடந்து நல்ல நிலையில் இருந்தால் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதில் 19 பேர் சீனாவில் இருந்து வந்தவர்கள். மேலும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (மார்ச் 24) இரவு முதல் இன்று காலை வரை வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், வெளியூர்களிலிருந்து வந்த வண்ணம் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி என அந்த பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மூலம் இவர்களை கணக்கெடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
வெளியூர்களிலிருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பியவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பில் இல்லாதவாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விவரம் இன்று தெரியவரும். எந்தவிதத்திலும் இந்த தொற்று நோய் பரவக்கூடாது என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அறியப்படுபவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பொருட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 370 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்புப் பிரிவுகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், படுக்கை வசதிகள் தேவை ஏற்பட்டால் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு பிரிவும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்புப்பிரிவு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அரசின் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து இன்றி சாலைகளை வெறிச்சோடியிருந்தாலும், வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள இளைஞர்கள் தங்கள் நண்பர்களை சந்திப்பதற்கு இருசக்கர வானங்களில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இவர்கள் இது போன்ற பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். தொடா்ந்து இருசக்கரவாகத்தில் சுற்றுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஆங்காங்கே விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, அனைவரும் உழவர் சந்தை போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கூடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வந்தவர்களின் நிலைக்கேற்ப அவர்கள் கணக்கெடுப்பு நிறைவடைந்தவுடன் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது", என்றார்.
இதையும் படிங்க: உபர் சீருந்து சேவை 21 நாள்கள் நிறுத்திவைப்பு