தர்மபுரி எஸ்.வி. ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் பாரதமாதா மணிமண்டபம் மற்றும் காந்தி, நேரு சிலைகளை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படைப்பிரிவில் பணியாற்றிய தியாகி சிவகாமி அம்மையாருக்கு பொன்னடைபோர்த்தி கவுரவிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், "பாரத மாதா ஆலயம் கட்ட வேண்டுமென குமரி அனந்தன் பல்வேறு முறை போராட்டம் நடத்தியுள்ளார். தற்போது பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் பாரத மாதா ஆலயம் கட்டப்பட்டு, அந்த பணி முடிவு பெறும் தருவாயில் உள்ளது. இதேபோல் அப்பகுதியில் நூலகம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கக்கூடிய ஓய்வூதிய தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் சிலை வைத்து மணிமண்டபம் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது" என்றார்.