தர்மபுரி மாவட்டத்தில் 68 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடைகளில் தினசரி ஒரு கோடிக்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்று வருவது வழக்கம். பண்டிகை காலங்களில் கூடுதலாக ஒரு கோடிக்கும் மது விற்பனையாகும்.
கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி மதுபான கடைகளையும் மூட உத்தரவிட்டது. வைரஸ் தொற்று குறைந்து வந்ததால் 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.
நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 அரசு மதுபான கடைகளில் மது விற்பனை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் மதுபானக் கடை திறக்கப்படாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் மது வாங்குவதற்காகக் குவிந்தனர்.
இதில் கடை திறப்பதற்கு முன்பே காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் ஏராளமானோர் வந்து மது வாங்கி சென்றனர்.
கடை திறந்த முதல்நாள் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.3.50 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரண்டாம் நாளில் மேலும் ரூ.3 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த இரண்டு நாள்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 அரசு மது கடைகளில் ரூ.6.50 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.